தேர்தல் குடு குடு


இப்போதெல்லாம் ஊரில் குடுகுடுப்பைகாரனை பார்ப்பதே இல்லை. சரி. கற்பனையில் ஒரு
கு.கு.காரன் தேர்தல் டயத்தில் என்ன சொல்கிறான் பார்ப்போமா?

கலைஞர் வீட்டு வாசலில் :
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது.
சொந்த பலத்தை நம்பி இருப்பீங்க.உடன்பிறப்பை உசுப்பி எழுப்ப
கடனா வாங்க போறீங்க ? சேர்த்ததை அள்ளி விடுவீங்க
ஊழலெல்லாம் மறந்திடும் பாருங்க.
நாற்காலியில் சின்னவர் உட்காரும் அழகை
பார்த்து ரசிப்பீங்க.
ஜக்கம்மா வாக்கு பலிச்சிடும் பாருங்க. எனக்கு எதாச்சும் போடுங்க.
  (கலைஞருக்கு ஏக குஷி )
அடுத்து போயஸ் வீட்டு வாசலில் :
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது.
ஜக்கம்மா வாக்கில் நல்லது சொல்றா. கேட்டுக்கோ தாயி.
மகத்திலே பொறந்த நீ ஜகத்தை மறுபடி ஆள போறே.
ராஜா உள்ள போன ராசியிலே இந்த
ராணிக்கு அடிக்குது யோகம்.
கருப்பு ரோஜா கூட்டு சேருது. அதனாலே இந்த
செவத்த அம்மாவுக்கு ஓட்டு கூடுது.
ஜெயத்துக்கு ஜெயம் சேருது.
கோட்டைக்கு நடையை கட்டு. இந்த
பரதேசிக்கு எதாச்சும் போட்டு. (சசிகலா 1000/ போடுகிறார்).

விஜயகாந்த் வீட்டு முன்பு :
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது.
தனியாக கோட்டைக்கு போன ஐயா
கும்பலாக போற காலம் பொறக்குது.
சேர்ந்த எடத்தோட மகிமையால
கட்சி வளருது உங்க தெம்பு  கூடுது.
கிடுகிடு உயரத்துக்கு போவீங்க இந்த
குடுகுடுப்பையை கொஞ்சம் கவனீங்க. (நன்றாகவே கவனிக்கிறார்)

பொது ஜனத்தின் வீட்டு முன்பு
குடு குடு குடு .நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது
எலக்சன் வருகுது .எலக்சன் வருகுது.
ஒரு நாள் ராஜாவாகும் யோகம் அடிக்குது.லீவு
கிடைக்குது. வசதி பெருகுது.
5000/ வரை உனக்கு ரேட்டு ஏறுது. நேத்து வரை சீந்தாத உன்னை
பெரிய தலைகளெல்லாம் கும்பிடு போடுது.
ரொம்ப வேண்டாம் பழைய துணி போடு போதும்.

புதுவை  ராம்ஜி.
 

படித்த ,கேட்ட ,பார்த்த கதைகள்


படித்த கதை. 

இரு தேவதைகள் பூமிக்கு சாதாரண மனித வடிவில் வந்தன.ஒரு பணக்கார கருமி வீட்டில் ஒரு இரவில் கெஞ்சி கூத்தாடி  தங்க இடம் கேட்டன. முதலில் மறுத்த அவர்கள் விருந்தாளிகள் தங்கும் அறையில் தங்க விடாமல் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு இடிந்து போன அறையில் அவர்களை தங்க வைத்தனர்.
கரடு முரடான தரையில் விரிப்பு ஏதும் இல்லாமல்  பட்டினியுடன் தேவதைகள் படுத்து உறங்கின 
தேவதைகளில் மூத்தது அந்த இடிந்த வீட்டின் சுவரில் ஒரு பெரிய துவாரம் இருப்பதைக்கண்டு செப்பனிட துவங்கியது.அதைக்கண்டு இளைய தேவதை என்ன உனக்கு பைத்தியமா இந்த இரக்கமற்ற மனிதர்களுக்குப்போய் உதவிசெய்கிறாயே என்று கடிந்து கொண்டது.அதற்கு மூத்த தேவதை நடக்கும் நிகழ்ச்சிகள் கண்ணால் காண்பதை விட வேறானவை என்றது சின்ன தேவதைக்கு ஒன்றும் புரியவில்லை
அடுத்த நாள் அவர்கள் இருவரும் ஒரு ஏழை விவசாயி வீட்டில் தங்கினர்..அந்த நடுத்தர வயதான தம்பதிகள் விருந்தினர்களான அந்த தேவதைகளை பரிவுடன் உபசரித்து தாங்கள் சாப்பிட வைத்திருந்த கொஞ்ச உணவையும் அவர்கட்கு கொடுத்துவிட்டு அவரகள் படுக்கையறையை தேவதைகளுக்கு கொடுத்து அந்த இரவில் அவர்களால் முடிந்த அளவு உபசரித்தனர் 

சூரியன் மறுநாள் உதித்தது.தேவதைகள் விழித்துப்பார்த்த போது அந்த ஏழை தம்பதியினர் மிகுந்த சோகத்துடன் கண்ணீருடன் காணப்பட்டனர்.அவர்கள் பிழைப்புக்காக வைத்திருந்த ஒரே ஒரு பசு தரையில் இறந்து கிடந்தது.
இளைய தேவதைக்கு மூத்த தேவதையின் மீது ஒரே கோபம்.
அந்த பணக்கார கருமி இதயமில்லாதவர்களின் சுவர்களை செப்பனிட்டாய்.ஆனால் பாவம் இந்த நல்ல மனிதர்களுக்கு இப்படி துன்பத்தை கொடுத்து விட்டாயே என்று குற்றம் சுமத்தியது

அதற்கு அந்த மூத்த தேவதை கண்ணால் காண்பது வேறு உண்மை வேறு என்று மறுபடியும் கூறியது.
நான் அந்த இரக்கமில்லாத செல்வந்தர் வீட்டின் சுவற்றில் ஒரு தங்கப்புதையலைப்பார்த்தேன்..அந்த உலோபிக்கு அது கிடைத்தால் பணத்திமிரால் எல்லோரையும் வதைப்பான் எனவே அதை மறைத்து சுவற்றைப்பூசினேன்.
இந்த ஏழையின் வீட்டில் அவள் மனைவியை அழைத்துப்போக மரண தேவதை வந்தாள் நான் அவளுக்கு அதற்க்குப்பதிலாக பசுவைக்கொடுத்தேன்..ஆகையால் நீ கண்ணால் கண்டது பொய்..சில சமயம் நடப்பவைகளின் உண்மை நிலை யாருக்கும் தெரியாது என்று அந்த தேவதை சொன்னது

 கேட்ட கதை

கேரளா பக்கம் போனீர்கள் என்றால் ஒரு பெரிய யானை போய்க்கொண்டு இருக்கும்.ஒரு சோப்ளாங்கி மனிதன் கையில் ஓர்
 சிறிய அங்குசத்தை வைத்து கொண்டு ஏதோ மொழியில் அதட்ட  அதுவும் பணிந்து நடக்கும். செல்லும் இடம் வந்ததும் தானே தன்னைகட்டும் சங்கிலியை அவனுக்கு எடுத்து கொடுப்பது மட்டுமல்லாது கட்ட வேண்டிய காலையும் அவனுக்கு தூக்கி காண்பிக்கும்.அந்த யானையின் பலம் எங்கே இந்த மனிதனின் பலம் எங்கே.அந்த சிறிய அங்குசத்திற்கு கட்டுப்பட்டு அது நடப்பதைநாம் ஆச்சரியத்துடன் காணலாம்.
அதே போல்,
எண்ணிலா ஆற்றல் கொண்ட இறைவன் மனிதனின் உண்மையான
பக்தி என்ற அங்குசத்திற்கு கட்டுப்பட்டு, அவன் கூப்பிடும் போதெல்லாம் வந்து துணை நின்று வேண்டியதை வழங்கி தன நிலை இறங்கி அருள் பாலிக்கின்றான்.
மேற்கண்ட உவமையை ஸ்ரீ முரளிதர சுவாமிகள் நேற்று காலை
6 .20 மணிக்கு பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்ற தலைப்பில்
ஆற்றி வரும் தொடருரையில் (விஜய் டிவி ) சொன்னபோது சிலிர்த்து
போனேன். ஆன்மீக உணர்வுள்ள ஒவ்வொருவரும் பார்த்து பயன்பெற
வேண்டிய நிகழ்ச்சி. ஆனந்த பாஷ்யம் பக்தியால் வந்தது எனக்கு மட்டும் அல்ல பார்வையாளரில் ஒரு பெண்மணியும் உருகி கரைவதை
விஜய் காண்பித்தது நிகழ்ச்சியின் சிறப்புக்கு சாட்சி.
 புதுவை ராம்ஜி

பார்த்த கதை

இந்த குறும்படம்இப்பொழுதுதான் பார்த்தேன்.
பேராசை பெரும் நஷ்டம் என்பதை 2 நிமிட இந்த கதை உணர்த்துகிறது.




.