துலாபாரம்


1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தை பார்த்தவர்கள் கண்கலங்காமல் இருந்ததைல்லையோ அதேப்போல் 1969 ம் வருடம் வெளிவந்த துலாபாரம் திரைப்படத்தைப்பார்த்துவிட்டு கண்ணீர் வராமல் வெளிவந்தவர்கள் இல்லை.
பின்பு இந்த படத்தை 80 களில் கறுப்பு வெள்ளை  டெலிவிஷனில் மாநில திரைப்படங்கள் வரிசையில் டில்லி தூர்தர்ஷன் ஒரு ஞாயிறு மதியம் இந்த படத்தை போட்டது.அதை நான் சாப்பிடும் போது பார்த்துவிட்டு மனதை பிழிந்த காட்சிகளால் சாப்பாட்டின் பாதியில் எழுந்து விட்டேன் மலையாளத்தில் முதலில் வந்த துலாபாரம் மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சாரதாவே தமிழிலும் கதாநாயகியாக நடித்தார். அவருக்கு ஊர்வசி பட்டம் இந்தப்படத்தால் கிடைத்தது.
ஏ வி எம் ராஜன் பரிதாபமான கணவன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.முத்துராமன் தன்னலமுள்ள கதாப்பாத்திரத்தில்  நாம் அந்த பாத்திரத்தை வெறுக்கும்படி நன்கு நடித்திருந்தார்.
மற்ற எல்லா சோகப்படத்தில் வருவது போலவே இந்த படத்திலும் துரோகமே எல்லாத்துயரங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது.
காதலன் காதலிக்கு செய்யும் துரோகம்,முதலாளி தொழிலாளிக்கு செய்யும் துரோகம்,வக்கீல் கட்சிக்காரருக்கு செய்யும் துரோகம்,நண்பருக்கு செய்யும் துரோகம் என்று பல துரோகங்கள் ஒரு அபலையின் வாழ்வில் விளையாடியிருப்பதை இந்த படத்தில் காணலாம்
அந்தப்படத்தில் சோகத்தை ஓவர் டோஸாக கொடுத்திருகின்றார்களோ என்று இப்பொழுது எனக்கு சந்தேகம் வருகின்றது.
இந்த படத்தின் இயக்கம் வின்சென்ட்.—பாடல் –கண்ணதாசன் இசை தேவராஜன். 
இந்தபாடல் முதலில் கேட்டபோது அவ்வளவாக மனதில் இடம் பிடிக்கவில்லை கேட்க கேட்க தான் பிடிக்க ஆரம்பித்தது.


காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன்
பாதையல்லவோ?

இயக்குனர் பாலாவும் விளிம்பு நிலை மனிதர்களும்

இயக்குனர் பாலாவும்



விளிம்பு நிலை மனிதர்களும்



  
தலைப்புக்கு பொருத்தமா இருக்குல்ல


  


தந்தையர் தினம்


தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி..
எல்லோரும் தாய்த்திருநாடு என்னும் போது அவர் மட்டும் ஏன் தந்தை என்று சொன்னார்.?
ஆம் தாய் என்று சொன்னால் அன்பு வந்துவிடும் ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் நமக்கு வீரம் வேண்டியிருந்தது ஒரு சக்தி தேவைப்பட்டது அது யாரால் நமக்கு கொடுக்கமுடியும் ஒரு தந்தையால் அல்லவா அது முடியும்.
எனக்கு என்னமோ தாயை மிக உயர்த்தி பேசும் இந்த சமூகம் அதற்கு சமமாக தந்தையை பார்ப்பததாக தெரியவில்லை.
என்னைப்பொறுத்த வரையில் தாயை  விடவும் தந்தை நமக்காக தியாகங்கள் நிறைய செய்கின்றார் என தோன்றுகின்றது

“தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்”

என்று கவிஞர் வாலி பாடியது போல் தகப்பனின் சுமை ஆயுசு வரையில்.
"குழந்தை பாரம் உனக்கல்லவா குடும்பபாரம் எமக்கல்லவா"

என்று ஒரு கணவன் பாடுவது போல் இன்னொரு திரைப்பட பாடல்.
இது தந்தையர்களுக்கு மிகப்பொருந்தும்.
என் தந்தையும் இதற்கு தகுந்த உதாரணமாக திகழ்ந்தார்.
எனது தாய் அவ்வளவாக படிக்காத குடும்ப தலைவி.எனது தந்தை ஒரு பொறியாளர்.ஆனால் மனைவியை தகுந்த மரியாதையுடன் நடத்தினார்.வீட்டு நிர்வாகம் அத்தனையிலும் அம்மாவின் ஆலோசனைபடி நடந்தார்.ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்த காலத்தில் மனைவி எவ்வளவு படித்திருந்தாலும் சம்பாதித்தாலும் சில கணவர்கள் அவர்களை அலட்சியம் பண்ணும் போது அந்த நாளில் என் தந்தை மனைவிக்கு உரிய உரிமையை கொடுத்தார் ஆனாலும் குடும்ப தலைவன் என்ற கம்பீரம் அவரிடம் எப்பொழுதும் இருக்கும்..

என் தகப்பனார் அரசு வேலையில் இருந்து  பொறியாளராக ஓய்வு பெற்று விட்டு பின்பு தனது 78 வயது வரையில் ஒரு தனியார் துறையில் வேலைப்பார்த்தார்.எங்களிடமிருந்து பணம் என்று எதிர்ப்பார்த்தது இல்லை.மிக மிக எளிமையாக வாழ்க்கை நடத்தினார்.நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோதும் வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருந்தார்
அவர் மோதிரமோ அல்லது வேறு தங்க நகையோ அணிந்து நாங்கள் பார்த்தது இல்லை தனது.குழந்தைகள் நலமே போதும் என்ற எண்ணத்துடன் கடைசி நாள் வரை வாழ்ந்தார். அவருக்காக் வைத்திய செலவுக்காக எந்த வித பெரிய செலவும் எங்களுக்கு அவர் வைக்கவில்லை.
அவர் வார்த்தைக்கு மாறாக நான் செய்த செய்கைக்கு நானே பலனை அனுபவித்த பின்பு தான் அவருடைய அறிவுரையின் உண்மை காலம் சென்று என்னால் உணரப்பட்டது
அவரின் நினைவு நாள் இரண்டு நாட்கட்கு முன் வந்தது.
.


அப்பா உன்னால் வந்தேன் உலகில்.
என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்
நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில
என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்

ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த
பலன்கள் அனைத்தும் எங்களிடம்.
தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தந்தை என
நான் அறிந்துகொண்ட போது நீ இல்லை இவ்வுலகில்

உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா
மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம்.
உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா
நலங்களும் தந்தவனே எங்கிருக்கின்றாய் இன்று.

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் இறைவா
என்னை அவருக்கு மகனாக பிறக்க வைக்காதே
எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது.
அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு




இன்று உலக தந்தையர் தினம்
எல்லா தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்