"பல்”லாண்டு வாழ்க ஒபாமா பக்கத்தில் வந்து எப்படி இருக்கே என்று கேட்டாலும் சரிதான் போய்யா என்று வள் என்று விழத்தோன்றும் நேரம் எது?
அதிசயமா மனைவி டிசைன் எதுவும் எனக்கு பிடிக்கலை என்று அவளுக்கு  புடவை எடுப்பதற்க்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் திருப்பி புன்னகை கூட பண்ணமுடியாத சமயம் எது?

அது தான் பல் வலி எனப்படும் மூஞ்சி வலியால் நாம் நாமாக இல்லாத நேரம்.  நான் பல் வலி என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன் பல்லில் இருந்து ஆரம்பித்து தங்கம் விலை போல் வலி ஏறு முகமாகவே இருந்து தாடை.காது மூளை என்று முகம் முழுவதும் வியாபித்து இரவு முழுவதும் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.
எனக்கு என்னமோ பல்லில் வரும் வலி அதை நன்கொடையாக ஒரு பல் வைத்தியரிடம் கொடுத்தால் தான் தீரும்.

இங்கு ஒவ்வொரு பல் டாக்டருக்கும் ஒன்று ஒன்று என்று பல் தானம் பல கொடுத்திருக்கின்றேன். நிறைய டாக்டரிடம் போனதுக்கு காரணம் ஒரு பல் டாக்ராவது எனக்கு நல்ல செய்திகொடுப்பவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை தான் காரணம். என்னதான் அவர்கள் இனிமையாக பேசினாலும் எனக்கு அவர்கள் ஹிரண்யகசிபுக்கு தம்பி மாதிரியே தோன்றுகின்றார்கள்.
நான் கின்னஸ் ரிக்கார்ட் க்கு எழுதிப்போடலாம் என்று இருக்கின்றேன் நான்தான் அதிகப்பட்ச பல் டாக்டரை களைப்பார்த்திருப்பேனோ என்று. எனக்கு சந்தேகம்.
கிட்டதட்ட நானே முக்கால் பல் டாக்டராகி விட்டேன் என நினைக்கிறேன்.
என் பல் எக்ஸ் ரே பார்த்து பார்த்து நானே எங்கே கேவிட்டி இருக்கு என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ரூட் கேனால்,ஃபில்லிங்,க்ரொளன்,ப்ரிட்ஜ் ,இம்ப்ளாண்ட் மற்றும் ஃப்ளாப் சர்ஜரி என்று அத்தனை வார்த்தைகளுக்கும் என் வாய் இடம் அளித்திருக்கின்றது.(பேரேசஸ் மட்டும் நான் போடலை)பல்லை பிடுங்கிக்கொண்டு  வாயில் ரத்தம் வழிய டிராகுலா மாதிரி நான் கார் ஓட்டிக்கொண்டு சிக்னலில் நின்ற போது பக்கத்து காரில் உள்ள ஒரு வயதான மாது என்னைப்பார்த்து மிரண்டது நிஜம்.

பல் பிடுங்கியதே தெரியாத அளவுக்கு தேர்ச்சியாக பிடுங்கும் டாக்டர் விஷ்ணு பிரசாதிலிருந்து,குடும்பக்கதை பேசிக்கொண்டே ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மிக்சிகன் பல் டாக்டர் சசிரேகா மற்றும் ராசியான எனக்கு பிடித்த ஒரு அரேபியன் பல் டாக்டர், இங்கு பிலடெல்பியாவில் என் பாதி கடவாய் பில்லை பிடுங்கி விட்டு பின்பு மீண்டும் சுவரில் ஓட்டை போடும் மிஷின் போன்ற கருவியால் மிச்ச பல்லை பிடுங்கிவிட்ட அமெரிக்க டாக்டர் என்று எத்தனை பல் டாக்டர்கள் .
நான் அவர்களுக்கு கொடுத்த ஃபீஸில் போயஸ் கார்டன் ஏரியாவில் ஒரு வீடு வாங்கியிருக்கலாம்.
நான் பார்த்த பல் டாக்டர்கள் அல்லது என் பல்லை பார்த்த வன்முறையாளர்கள் ஆனால் என் நண்பர்களாக ஆனவர்கள்.

பாண்டிச்சேரியில் இருவர்.
மதுரையில் ஒருவர்
சென்னையில் ஒருவர்
டில்லியில் ஒருவர்.
ஹாங்காகில் ஒருவர்.
மிக்சிகனில் நால்வர்
கலிபோர்னியாவில் ஒருவர்
பிலெடெல்பியாவில் நால்வர்( ஸ்பெஷ்லிஸ்டை சேர்த்து)
பல் வலிக்கு சில நிவாரணங்கள்.
  1. இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி குறையும்.
  2. மிளகுடன்  சர்க்கரையைச் சேர்த்து  அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்
  3. வெங்காயத்தை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி வலிக்கின்ற இடத்தில்  வைத்தால் பல்வலி நீங்கிவிடும்.
  4. பெருங்காயப் பொடியை வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.
  5. கிராம்பு தைலம்  தடவலாம்
  6. ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு மெல்ல பல் வலி குறையும்
  7. கை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஐஸ் கட்டியை தேய்த்தால் பல் வலி குறையும்

போன வாரம் பல் வலி வந்த போது இத்தனையும் மாலை 6 மணியிலிருந்து மறு நாள் காலை வரை செய்து பார்த்துவிட்டு வலி நிவாரணி advil இரண்டு முழுங்கினாலும் வலி எல்லாவற்றுக்கும் ஏற்கனவே பழகிவிட்டதால் உனக்கும் பெப்பே உன் அப்பவனுக்கும் பெப்பே என்று அழிச்சாட்டியமா போகவில்லை

பல் டாக்டரிடம் ஓடி மொய் எழுதினவுடன் தான் வலி கொஞ்சம் தேவலை.அங்குள்ள நீளமான நாற்காலியில் சாய்ந்துகொண்டு அல்லது பாதி படுத்துக்கொண்டு அவர்களின் உபகரணங்களை பார்த்தவுடன் இப்போ வயிற்றிலும் வலி.கண்ணை மூடிக்கொண்டு வாயை திறந்து கொண்டு 24 பல்லையும் டாக்டரிடம் ஒப்படைத்த போது அந்த அழகான பிலிப்பன்ஸ் பெண் பல் டாக்டர் முனி பார்ட் 2 விளம்பரத்தில் வரும் பெண் போல என் மனக்கண்ணுக்குள் தோற்றமளித்தாள்.
கண்ணன் வாய்க்குள் உலகத்தை பார்த்த யசோதை மாதிரி என் வாயை பார்த்து ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்ட அவள் ஒரு நற்செய்தி(?) சொன்னாள்..இது பல்வலி யும் ஈறு வலியும் கலந்தது..பல்வலிக்கு நான் சரி செய்கிறென் ஈறு வலிக்கு வேறு ஒரு டாக்டரை ஸ்பெஷலிஸ்ட்) பாருங்கள் என்றாள். மறுபடியும் முதலில் இருந்தா?1 comment:

Gnana Boomi said...

நன்றாக இருக்கிறது நண்பரே, நன்கு சிரிப்பை வரவழைத்தது. பல்லைப் பார்த்து சிரிக்கிறேன் என்று நினையாதீர் :), எழுத்தைச் சொன்னேன். இட்லி வடையிலிருந்து இங்கு வந்தேன். தமிழ் பதிப்பாளர்களில் நகைச்சுவையாக எழுதுபவர் மிகக் குறைவு என்ற எண்ணத்தைப் போக்குங்கள்.

நிர்வாக குழு உறுப்பினர்
ஞானபூமி

Post a Comment