தாயுமானவன்
நான் என் பள்ளி வயதில் எந்த ஒரு பஜனையோ சுலோகங்களோ படித்ததில்லை. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தாலும் கற்றுக்கொள்ள விருப்பபட்டதில்லை
தெரிந்ததல்லாம் சிலோன் ரேடியோவில் சினிமா பாட்டு அகில இந்திய வானொலி சினிமா பாட்டுக்கள்தான்.
1980 அல்லது 1981 ல் மதுரையில் நண்பர்குழாத்துடன் வடக்கு வடம் போக்கி குட் ஷெட் வீதி சந்திப்பில் குமார் டீ கடையில் அரட்டை அடித்துக்கொண்டு டீ குடிக்கும்போது திடீரென எதிர் வீட்டில் ஒரு சலசலப்பு. திடீரென ஒரு 20 அல்லது 25 பேர் குவிந்தனர்.  என்ன என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆரஞ்சு வண்ண உடையுடன் பளீரென பாபா அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு கூடியிருந்த சிலர் வீதி என்று பாராமல் தரையில் வீழ்ந்து வணங்கினர்
நாங்கள் வாயடைத்து நின்றோம்.நான் அவரைப்பற்றி அவ்வளவாக கேள்வி பட்டதில்லை.எங்கள் வீட்டில் ஷிரடி பாபா சிறிய படத்தை பார்த்திருக்கின்றேன்..இப்பொழதுதான் சத்திய சாய்பாபாவை நேரில் பார்க்கின்றேன். அவர் கூட்டத்தினரை நோக்கி கையை தூக்கி ஆசிர்வாதம் பண்ணினார் முக்கியமாக டீ கடையில் நின்றிருந்த எங்களைப்பார்த்தும் ஆசிர்வாதம் செய்தார்.நான் அவரை நோக்கி என்னை அறியாமல் வணங்கினேன்.இதெல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்தது.
அந்த நிகழ்ச்சிக்குப்பின்பும் எனக்கு எந்த வித ஈர்ப்பும் அவரிடம் எழவில்லை.
..இன்று வரை ஒரு ஆச்சரியம் அன்று அவர் எனக்கு அப்படி எப்படி ஒரு பளீர் கலரில் தோன்றினார் என்று.உண்மையில் அவர் உடல் வர்ணம் கிருஷ்ணன் வர்ணம்
காலங்கள் உருண்டன.1995  நவம்பர் 21 சென்னை விமான நிலயத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் என் சகோதரர் மனைவியை வரவேற்க்க நானும் என் சகோதரரும் சென்றிருந்தோம். அங்கு அப்போது சத்ய சாய் பாபாவின் பெரிய படம் வைக்கப்பட்டு வெளி நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்துக்கொண்டிருந்தனர்.(பின்பு தான் தெரிந்தது பாபாவின் 70 வது பிறந்த நாள் விமர்சை யாக கொண்டாடப்பட்ட நேரம் அது)
என் வாய் சற்று அடக்கமில்லாத வாய் பகிங்கரமாக அவரைப்பற்றி அங்கேயே விமர்சனம் செய்தேன்.என் சகோதரன் என்னை கடிந்து கொண்டான். உன் எண்ணங்களை வீட்டில் சொல் ஆனால் பொது இடத்தில் வேண்டாம் என்று.
1996 ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் மிக்சிகனில் காலடி வைத்தேன். அப்போது அந்த பூமியில் எனக்கு என் சொந்த குடும்பத்தை தவிர பரிச்சமானவர்கள் இரண்டு பேர்.அவர்கள் வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் தான் ஆமாம் எனக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் யாரும் பூமியின் இந்த பக்கம் இல்லை எல்லாம்  அந்த பக்கம் தான். நம்பி வந்தவர் அப்பொழுது  அங்கு இல்லை.வேறு யாரோ ஒருவர் இருந்தார்.அவரால் அலட்சியப்படுத்தப்பட்டேன்
தனிமை விரக்தி,துயரம் துரோகம் மற்றும் கலாச்சார மாற்றம் எல்லாம் என்னை பாடாய் படுத்தியது.இப்பொழது மாதிரி தொலைபேசி அலை பேசி அவ்வளவாக இந்தியாவில் வலம் வராத காலம்.அதனால் என் தனிமையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை.
கடவுளே எனக்கு வழிகாட்டு. மனநிம்மதிக்கு ஒரு குருவை காட்டு என உறங்கப்போனேன்.கனவில் கயிற்றுக்கட்டிலில் ஒரு உருவம் மெதுவாக எழந்திருந்து என்னை ஆசிர்வதித்தது.ஒரு பக்கம் பார்த்தால் ஷீரடி பாபா மறுபுறம் சத்ய சாய்.
எனக்கு ஒரே ஆச்சரியம். எங்கள் குடும்பம் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களின் பக்தர்கள்.எனக்கு அப்போது அரவிந்த ஆஸ்ரம அன்னையிடம் ஒரு பக்தி உண்டு. இவர்கள் இல்லாமல் எப்படி கனவில்  பாபா எனக்கு குருவாக வந்தார் என்று.
எனக்கு இந்த இரண்டு பாபா பற்றி ஒன்றுமே தெரியாது.சரி இங்குள்ள இந்தியர் எவரிடமாவது பாபா கோயிலைப்பற்றி கேட்கலாம் என்றிருந்தேன்.அப்போது எனக்கு ஒரு இந்தியர் கூட பரிச்சயம் கிடையாது.
மறு வாரம் திரு ரமேஷ் ,ஷோபா தம்பதியர் அறிமுகம் ஆனார்கள்.அதற்கு அடுத்த வாரம் அவர்கள் காரில் அவர்கள் வீட்டுக்கு என்னை கூப்பிட்டுக்கொண்டு போகும்போது
சத்ய சாய் படம் காரில் இருந்ததைப்பார்த்த வுடன் தான் அவரைப்பற்றி கேட்க தோன்றியது. நான் சத்ய சாய் கோயிலைப்பற்றி கேட்டவுடன் ஷோபா அவர்கள் அவருக்கு கோயில் என்று எதுவும் இங்கு  இல்லை ஆனால் சமிதி என்று சொல்லப்படும் சாய் சென்டர் இங்கு உள்ளது நான் வாரா வாரம் வியாழன் அன்று செல்வேன் உங்களை இந்த வாரம் அழைத்து செல்கிறேன் என்றார்.
மறு வாரம் அங்கு சென்றேன்.நிறைய இந்தியர்கள் சில அமெரிக்கர்கள்,ஒழுங்கு சுத்தம் முதல்தடவையிலேயே அந்த சூழ்நிலை என்னை கவர்ந்தது.வார வாரம் அங்கு செல்ல ஆரம்பித்தேன்
அந்த வருடம் 1996 நவம்பரில் அங்கு நடைப்பெற்ற பாபாவின்  பூஜை தினத்தில் நான் தான் பாபாவுக்கு ஆர்த்தி எடுத்தேன்.
இதே நவம்பரில் கடந்த வருடம் பாபாவை விமர்சனம் செய்த வாய் இந்த வருடம் அவரின் ஆர்த்தி பாடலை பாடியது
 பிலெடெல்பியா வரும் வரை அந்த சென்டர் அன்பர்கள் தான் என் உறவினர்கள்.எனக்கு கார் கிடைக்கும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள்
அவரை குருவாக தெய்வமாக நம்ப தொடங்கியதில் இருந்து என் வாழ்வில் வசந்த காலமும் வந்தது சூறாவளியும் வந்தது.ஆனால் அதிலிருந்து மீள சக்தி கொடுத்தார்
வேண்டியது பல நடந்தது நடக்காத கோரிக்கைகளும் உண்டு.ஆனால் அதற்கான காரணங்களையும் மனதில் தோன்ற வைத்தார்
அதனால் அவர் அருளால் சந்தோஷம் வரும்போது தலைகால் புரியாமல் ஆடவும் செய்யவில்லை.துன்பம் வரும் போது நிலை குலைந்து போகவும் இல்லை.
என் குழந்தைகள் சாய் பால விகாரில் நல்லொழுக்கம் படித்தனர்.
அடிப்படை கலாச்சாரத்தை பாபாவின் வார்த்தைகளால் குழந்தைகள் புரிந்துக்கொண்டனர்
 இங்கு வந்ததிலிருந்து நான் பாபா சென்டருக்கு போகவில்லை அவர் எங்களை வழிநடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்.
ஒரு ஆச்சரியம் நான் எப்பொழது பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி அல்லது வொய்ட் பீல்ட் போனாலும் ஒரு பைசா கூட என்னிடம் அவர்கள் நன்கொடை என்று வசூலித்ததில்லை.
இங்குள்ள சென்டர்களும் பணம் வசூலிக்க தடை இருக்கின்றது.
அவருக்கு வேண்டியது .நல்லொழக்கம் மனிதநேயம் அன்பு சேவை இதுதான்..
ஒருதடவை பாபா கூறினார்
என்னை பரட்டை தலையா என்று சொன்னால் நான் கோபப்பட மாட்டேன் ஏனென்றால் நான் பரட்டை தலையன் தான்.அது தான் உண்மை
அதே போல் மொட்டைத் தலையா என்றாலும் கோபப்படமாட்டேன்.
ஏனென்றால் நான் மொட்டைத் தலையன் இல்லை அதனால் அவர்கள் என்னை சொல்லவிலை என்று போய் விடுவேன்
எவ்வளவு அர்த்தம் பொதிந்த நகைச்சுவையான அறிவுரை.
உங்களை யாராவது கடிந்தால் அது உண்மையான காரணமாக இருந்தாலும் சரி உண்மைக்கு மாறாக இருந்தாலும் சரி நாம் கோபப்பட அவசிய மில்லை என்பதை எவ்வளவு எளிமையாக கூறியிருக்கின்றார்

அவருடைய இந்த சிறிய உதாரணம் என் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்..தான் பள்ளியில் இதை கடைப்பிடிப்பதாக கூறுவாள்.

அவர் அன்பில் தாய்,கண்டிப்பில் தந்தை,பாசத்தில் குழந்தை,கருணையில் தெய்வம் அவர்தான் பாபா.அவரை புரிந்துகொள்ள முடியாது. உணரவே முடியும்.
அவர் பூதவுடலை நீத்தாலும் இவ்வுலகில் எம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவர் கூறிய அஹிம்சா நெறியினை பின்பற்றுவோம்

No comments:

Post a Comment