தந்தையர் தினம்


தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி..
எல்லோரும் தாய்த்திருநாடு என்னும் போது அவர் மட்டும் ஏன் தந்தை என்று சொன்னார்.?
ஆம் தாய் என்று சொன்னால் அன்பு வந்துவிடும் ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் நமக்கு வீரம் வேண்டியிருந்தது ஒரு சக்தி தேவைப்பட்டது அது யாரால் நமக்கு கொடுக்கமுடியும் ஒரு தந்தையால் அல்லவா அது முடியும்.
எனக்கு என்னமோ தாயை மிக உயர்த்தி பேசும் இந்த சமூகம் அதற்கு சமமாக தந்தையை பார்ப்பததாக தெரியவில்லை.
என்னைப்பொறுத்த வரையில் தாயை  விடவும் தந்தை நமக்காக தியாகங்கள் நிறைய செய்கின்றார் என தோன்றுகின்றது

“தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்”

என்று கவிஞர் வாலி பாடியது போல் தகப்பனின் சுமை ஆயுசு வரையில்.
"குழந்தை பாரம் உனக்கல்லவா குடும்பபாரம் எமக்கல்லவா"

என்று ஒரு கணவன் பாடுவது போல் இன்னொரு திரைப்பட பாடல்.
இது தந்தையர்களுக்கு மிகப்பொருந்தும்.
என் தந்தையும் இதற்கு தகுந்த உதாரணமாக திகழ்ந்தார்.
எனது தாய் அவ்வளவாக படிக்காத குடும்ப தலைவி.எனது தந்தை ஒரு பொறியாளர்.ஆனால் மனைவியை தகுந்த மரியாதையுடன் நடத்தினார்.வீட்டு நிர்வாகம் அத்தனையிலும் அம்மாவின் ஆலோசனைபடி நடந்தார்.ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்த காலத்தில் மனைவி எவ்வளவு படித்திருந்தாலும் சம்பாதித்தாலும் சில கணவர்கள் அவர்களை அலட்சியம் பண்ணும் போது அந்த நாளில் என் தந்தை மனைவிக்கு உரிய உரிமையை கொடுத்தார் ஆனாலும் குடும்ப தலைவன் என்ற கம்பீரம் அவரிடம் எப்பொழுதும் இருக்கும்..

என் தகப்பனார் அரசு வேலையில் இருந்து  பொறியாளராக ஓய்வு பெற்று விட்டு பின்பு தனது 78 வயது வரையில் ஒரு தனியார் துறையில் வேலைப்பார்த்தார்.எங்களிடமிருந்து பணம் என்று எதிர்ப்பார்த்தது இல்லை.மிக மிக எளிமையாக வாழ்க்கை நடத்தினார்.நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோதும் வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருந்தார்
அவர் மோதிரமோ அல்லது வேறு தங்க நகையோ அணிந்து நாங்கள் பார்த்தது இல்லை தனது.குழந்தைகள் நலமே போதும் என்ற எண்ணத்துடன் கடைசி நாள் வரை வாழ்ந்தார். அவருக்காக் வைத்திய செலவுக்காக எந்த வித பெரிய செலவும் எங்களுக்கு அவர் வைக்கவில்லை.
அவர் வார்த்தைக்கு மாறாக நான் செய்த செய்கைக்கு நானே பலனை அனுபவித்த பின்பு தான் அவருடைய அறிவுரையின் உண்மை காலம் சென்று என்னால் உணரப்பட்டது
அவரின் நினைவு நாள் இரண்டு நாட்கட்கு முன் வந்தது.
.


அப்பா உன்னால் வந்தேன் உலகில்.
என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்
நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில
என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்

ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த
பலன்கள் அனைத்தும் எங்களிடம்.
தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தந்தை என
நான் அறிந்துகொண்ட போது நீ இல்லை இவ்வுலகில்

உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா
மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம்.
உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா
நலங்களும் தந்தவனே எங்கிருக்கின்றாய் இன்று.

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் இறைவா
என்னை அவருக்கு மகனாக பிறக்க வைக்காதே
எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது.
அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு




இன்று உலக தந்தையர் தினம்
எல்லா தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

2 comments:

மாரேபி said...

மனைவிக்கு உரிய உரிமையை கொடுத்து மனைவியின் ஆலோசனையைகேட்டு அதன்படி குடும்ப நிர்வாகம் நடத்தும் கணவன் உன்னத நிலைக்கு வந்து உயர்ந்த மனிதன் ஆவான் என்பது படித்திருந்தும் சில ஆண்களுக்கு புரியாதது ஏனோ? இதனால் அவர்களே தங்களை தாழ்த்திக் கொள்கிறார்கள் என்பதை பாவம் அவர்கள் அறியவில்லை

Anonymous said...

தந்தையைப்பற்றி தந்தையர் தினத்தில் ஒரு வார்த்தை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தந்தை வழி செல்லும் பிள்ளைகள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமிலலை. இதனை இக்கால இளைஞர்கள் உணர்ந்து நடந்துகொண்டால் அவர்கள் வாழ்வு வளமுடன் அமையும்.

Post a Comment